நீச்சல் பழகியபோது பரிதாபம் கிணற்றில் மூழ்கி தந்தை-மகன் பலி


நீச்சல் பழகியபோது பரிதாபம் கிணற்றில் மூழ்கி தந்தை-மகன் பலி
x

நிலக்கோட்டை அருகே நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் பலியாகினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவர், பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

அவருடைய மனைவி தவமணி. இந்த தம்பதியின் மகன் விமல்குமார் (15). இவர், நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். விமல்குமாருக்கு நீச்சல் தெரியாது. இதனால் தனது மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க ராஜ்குமார் முடிவு செய்தார்.

கிணற்றில் மூழ்கினர்

இதையடுத்து நேற்று வாரவிடுமுறை என்பதால் அவர், தனது மகன் விமல்குமாருக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதற்காக அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றுக்கு அழைத்து சென்றார். அங்கு கிணற்றுக்குள் முதலில் ராஜ்குமார் இறங்கினார். அதன்பிறகு விமல்குமாரும் கிணற்றுக்குள் இறங்கினார். இதையடுத்து ராஜ்குமார் தனது மகனை பிடித்தபடி, நீச்சல் கற்றுக்கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீருக்குள் விமல்குமார் மூழ்க தொடங்கினார். அப்போது தனது தந்தையை அவர் இறுக்கமாக பிடித்ததாக தெரிகிறது. இதனால் ராஜ்குமாரும் தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியவில்லை. தனது மகனையும் மீட்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் 2 பேரும் கிணற்று தண்ணீரில் மூழ்கினர்.

இதற்கிடையே நீச்சல் பழக சென்ற கணவரும், மகனும் நீண்டநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தவமணி, தனது உறவினர்களுடன் அந்த கிணற்றுக்கு சென்றனர். அப்போது கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் ராஜ்குமார் மற்றும் விமல்குமாரின் துணிகள் கிடந்தன. ஆனால் அவர்கள் 2 பேரையும் காணவில்லை. இதனால் அவர்கள் கிணற்றில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

2 உடல்கள் மீட்பு

தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர்.

அப்போது ராஜ்குமார், விமல்குமார் ஆகியோர் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தனர். கிணற்று தண்ணீரில் மூழ்கி தந்தையும், மகனும் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரின் உடல்களையும் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

பின்னர் அவர்களது உடல்கள், பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story