கடத்தூரில் சோகம்; பழக்கடைக்குள் தனியார் கல்லூரி பஸ் புகுந்து தந்தை, மகள் பலி-டிரைவர் கைது
மொரப்பூர்:
கடத்தூரில் பழக்கடைக்குள் தனியார் கல்லூரி பஸ் புகுந்ததில் தந்தை, மகள் பலியாகினர். இதுதொடர்பாக பஸ் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒப்பந்ததாரர்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 40). இவர் கடத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இவருடைய மனைவி விக்னேஷ்வரி (33). இந்த தம்பதிக்கு ஷாசிகா (10) என்ற மகளும், பிரம்மபுத்திரன் (4) என்ற மகனும் இருந்தனர். ஷாசிகா அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்தநிலையில் நேற்று மாலை கர்ணன், தனது மகள், மகனை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு, கடத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றார். அங்கு தர்மபுரி-கடத்தூர் சாலையோரத்தில் பழக்கடையில் வீட்டுக்கு தேவையான பழங்களை வாங்கி கொண்டு இருந்தார்.
தந்தை-மகள் பலி
அப்போது அந்த வழியாக சென்ற தனியார் கல்லூரி பஸ், எதிரே வந்த தனியார் பஸ் மீது உரசி, சாலையோர பழக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் கடையில் பழங்கள் வாங்கி கொண்டிருந்த கர்ணன் மற்றும் ஷாசிகா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். சிறுவன் பிரம்மபுத்திரன் மற்றும் அங்கிருந்த சில்லாரஅள்ளியை சேர்ந்த சண்முகம் (25), அனிஷ் (25), லட்சுமணன் (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தால் தர்மபுரி-கடத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பழக்கடையும் சேதமானது. அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
டிரைவர் கைது
விபத்து குறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பஸ் மோதியதில் உடல் நசுங்கி பலியான கர்ணன், ஷாசிகா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்தில் பலியான கர்ணன், ஷாசிகா உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனியார் கல்லூரி பஸ் டிரைவர் பிரபாகரனை (35) கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.