மஞ்சள் காமாலை ேநாயால் தந்தை-மகள் சாவு
முதுகுளத்தூர் அருகே மஞ்சள் காமாலை ேநாயால் தந்தை-மகள் இறந்தனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள முத்து விஜயபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய அருள் (வயது 27).விவசாயி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் மூலிகை சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய உடலை பரிசோதனை செய்ததில் கல்லீரல் முழுவதும் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவரது மகள் ஜெனி தெரசா (வயது 6) கடந்த 24-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனை செய்வதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் சிறுமிக்கு மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்த ஆரோக்கிய அருளும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆரோக்கிய அருள் உயிரிழந்தார். இதை தொடர்ந்து சிறுமி ஜெனி தெரசாவும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். தந்தை-மகள் இறப்பால் முத்து விஜயபுரம் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறையினர் உரிய விசாரணை நடத்தி எங்கள் பகுதியில் உள்ள கிராம பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கூறுகின்றனர்.