ராணுவவீரர் மனைவி கொலையில் மாமனார், கொழுந்தனார் கைது
வில்லுக்குறி அருகே ராணுவவீரரின் மனைவியை அடித்துக் கொலை செய்த வழக்கில் மாமனார், கொழுந்தனாரை போலீசார் கைது செய்தனர்.
திங்கள்சந்தை:
வில்லுக்குறி அருகே ராணுவவீரரின் மனைவியை அடித்துக் கொலை செய்த வழக்கில் மாமனார், கொழுந்தனாரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ராணுவ வீரர் மனைவி
வில்லுக்குறி அருகே உள்ள மணக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை (வயது 68). இவருடைய மகன் அய்யப்பன் கோபு (46) ராணுவத்தில் பணியாற்றியவர். இவருக்கு துர்கா (38) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
ராணுவ வீரர் அய்யப்பன் கோபு கடந்த மாதம் திடீரென இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து துர்கா கணவரின் வீட்டில் மகள்களுடன் வசித்து வந்தார்.
பணத்தகராறில் கொலை
இந்த நிலையில் அய்யப்பன்கோபு இறந்ததையடுத்து அவரது குடும்பத்திற்கு பணபலன்கள் கிடைத்ததாக தெரிகிறது. இந்த பணத்தை பங்குபோடுவது தொடர்பாகவும், சொத்து பிரச்சினை காரணமாகவும் துர்காவுக்கும் அவரது மாமனார் ஆறுமுகம் பிள்ளைக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஆறுமுகம்பிள்ளை மற்றும் அவரது மகனும், அய்யப்பன் கோபுவின் தம்பியுமான மது (43) ஆகிேயார் சேர்ந்து துர்காவை கம்பால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த துர்காவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு துர்கா பரிதாபமாக இறந்தார்.
மாமனார், கொழுந்தனார் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம்பிள்ளை, மது ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ராணுவ வீரர் அய்யப்பன் கோபு இறந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு கிடைத்த பணபலன்களில் மாமனார் மற்றும் கொழுந்தனாருக்கு துர்கா பங்கு தர மறுத்ததாகவும், அதனால் இருவரும் சேர்ந்து கம்பால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஆறுமுகம்பிள்ளை மற்றும் மது ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.