கழுத்தில் மிதித்து தந்தை கொலை; தாய்க்கு கத்திக்குத்து
நாட்டறம்பள்ளி அருகே வேலைக்கு போகச்சொன்னதால் தந்தையை கழுத்தில் மிதித்து கொலை செய்த வாலிபர், தாயையும் கத்தியால் குத்தினார். அவரை பொதுமக்கள் கட்டிவைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
வேலைக்கு போகச்சொன்னார்
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு கிரி (32), முத்து (30) என்ற மகன்களும், சந்தியா (28) என்ற மகளும் உள்ளனர். மோகன் துணி வியாபாரம் செய்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த மூன்று வருடமாக வியாபாரத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளாா்.
இவரது மகன் முத்து பட்டபடிப்பு முடித்து விட்டு டிரைவர் வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதனால் நேற்று தாயார் வளர்மதி தனது முத்துவிடம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தால் செலவுக்கு என்ன செய்வது. இதனால் வேலைக்கு போ என கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
மிதித்து கொலை
அப்போது அங்கு படுத்திருந்த முத்துவின் தந்தை மோகன், தாயிடம் ஏன் தகராறு செய்கிறாய் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த முத்து தனது தந்தையின் கழுத்தை காலால் மிதித்துள்ளார். இதில் மோகன் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தட்டிக் கேட்ட தாயை கத்தியால் முகம் மற்றும் தலை மீது தாக்கி உள்ளார். இதனால் அவர் கூச்சல் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர்.
அப்போது மோகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் படுகாயம் அடைந்த வளர்மதியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கட்டிவைத்தனர்
அதைத்தொடர்ந்து அப்பகுதி பொது மக்கள் முத்துவை கயிற்றால் கட்டி வைத்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருந்த முத்துவை மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையை, மகன் காலால் மிதித்து கொலை செய்து தாயையும் கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.