மனைவி-மாமனாருக்கு ஆயுள் தண்டனை
காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
மயிலாடுதுறை;
காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
காதல் திருமணம்
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அப்புராஜபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைமதி. இவரும் சதீஷ்குமார்(வயது 30) என்பவரும் காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.. திருமணமான சில மாதங்களிலேயே கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் கலைமதி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் 2019-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி சதீஷ்குமார் தனது மனைவியை அழைத்து வர தனது மாமனார் நாகராஜன் வீட்டுக்கு சென்றார்.
கொலை
அப்போது அங்கு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கலைமதியும், அவரது தந்தை நாகராஜனும் சேர்ந்து சதீஷ்குமாருடன் சண்டையிட்டனர். இதில் ஆத்திரமடைந்த நாகராஜன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை குத்தினார்.கலைமதி செங்கல்லை எடுத்து தனது கணவர் சதீஷ்குமாரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜன், கலைமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சதீஷ்குமாரை கொலை செய்த நாகராஜன்(60), அவரது மகள் கலைமதி (30) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன் ஆஜரானார்.