சவுதிஅரேபியாவில் இறந்த வாலிபர் உடலை இந்தியா கொண்டுவர தந்தை கோரிக்கை
சவுதிஅரேபியாவில் இறந்த வாலிபர் உடலை இந்தியா கொண்டுவர தந்தை கோரிக்கை
சவுதிஅரேபியாவில் மர்மமான முறையில் இறந்த வாலிபர் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என அவருடைய தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். மனு கொடுத்து 12 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.
ஊராட்சி மன்ற தலைவர்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே குலமங்கலத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது70), ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 10-ந் தேதி ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது இளைய மகன் ஜெயராஜ் (32), அவருக்கு திருமணமாகி கண்ணகி என்ற மனைவியும், ஜெயஸ்ரீ (4) என்ற மகளும் உள்ளனர். ஜெயராஜ் கடந்த 2018-ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டில் உள்ள தம்மம் பகுதியில் கட்டிட பணிக்காக சென்றார்.
கட்டிட பணிக்கு
இந்நிலையில் கடந்த அக். 9-ந் தேதி எனது மருமகள் கண்ணகிக்கு, சவுதிஅரேபியா நாட்டின் தூதரகத்தின் அதிகாரிகள் போன் செய்து, ஜெயராஜ் இறந்துவிட்டதாகவும், குளியலறையில் தூக்கு மாட்டி இறந்தது போன்று ஒரு புகைப்படத்தையும் அனுப்பியுள்ளனர். அதன்பிறகு அங்கிருந்து எந்தவித தகவலும் இல்லை.
எனது மகனின் இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளது, இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எனது மகனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும். மேலும், சவுதி அரேபியாவில் உள்ள எனது மகனின் உடலை இந்தியா கொண்டு வர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் சோகம்
தற்போது மனு கொடுத்து 12 நாட்களாகியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஜெயராஜின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.