கர்நாடகா மாநில மதுபாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த தந்தை-மகன் கைது


கர்நாடகா மாநில மதுபாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த தந்தை-மகன் கைது
x

ஜோலார்பேட்டை அருகே கர்நாடகா மாநில மதுபாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பம் கிராமத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை கார் மூலம் கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட தனிப்பிரிவு போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது நிலத்தில் உள்ள தனி ஷெட் ஒன்றில் காரில் 86 பெட்டிகளில் கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காரில் மதுபாக்கெட்டுகள் பதுக்கி வைத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அதேப் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 61), இவரது மகன் இளவரசன் (32) ஆகிய இருவரும் வருகிற 4 மற்றும் 5-ந் தேதி உள்ளூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது விற்பனை செய்வதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து 86 பெட்டிகளில் 4,704 மது பாக்கெட்டுகள் வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் 3 லிட்டர் சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்து, கார் மற்றும் மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story