கடலூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் தந்தை-மகன்கள் கைது
கடலூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன்கள் கைது செய்யப்பட்டனா்.
கடலூர் தேவனாம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார் நேற்று காலை தேவனாம்பட்டினம் கே.கே.நகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார், அவரை சோதனை செய்வதற்காக எப்.ஆர்.எஸ். செயலி (முக அடையாளம் மூலம் குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட புதிய செயலி) மூலம் புகைப்படம் எடுக்க முயன்றனர்.
உடனே அந்த வாலிபர், புகைப்படம் எடுக்க விடாமல் போலீசாரை தடுத்ததுடன், தனது தம்பி மற்றும் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். பின்னர் அவர்கள் வந்து, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம், தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த கடலூர் வண்ணாரப்பாளையம் கே.டி.ஆர். நகரை சேர்ந்த முத்தையன், இவரது மகன்கள் முகிலன் (வயது 32), முரளி (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.