சிறுவனை மரத்தில் கட்டி தாக்கிய தந்தை-மகன் கைது
சிறுவனை மரத்தில் கட்டி தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் சேலத்தார் காடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ்குமார்(வயது 17). இவர் ரெட்டிபாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த தனுஷ்குமாரை, அவரது நண்பர்களான சந்திரபாளையம் பகுதியை சேர்ந்த ராமன், லட்சுமணன் ஆகியோர் ரெட்டிபாளையம் சென்று டீ குடித்துவிட்டு வருவதற்கு, ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளனர். தனுஷ்குமார் டீ குடித்துவிட்டு அங்கிருந்து வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திரபாளையத்தை சேர்ந்த சகாதேவன்(29) என்பவர் தனுஷ்குமாரிடம், அவர் தனது நண்பர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் பற்றி கேட்டுள்ளார். அதற்கு அவர், தனக்கு அதுபற்றி தெரியாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனுஷ்குமார் கைகாட்டி சென்று தனது வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சகாதேவன் மற்றும் அவரது தந்தை சாமிநாதன்(59) ஆகியோர், அவரை பிடித்து சந்திரபாளையம் கருப்புசாமி கோவில் அருகே உள்ள அரசமரத்தில் கட்டி வைத்து அவரை திட்டி, தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் தனுஷ் குமார் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து சகாதேவன், சாமிநாதன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே தனுஷ்குமார் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.