27 பவுன் நகையை திருடியதால் தொழிலாளியை அடித்துக்கொன்ற தந்தை-மகன்


27 பவுன் நகையை திருடியதால் தொழிலாளியை அடித்துக்கொன்ற தந்தை-மகன்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 3:03 PM IST)
t-max-icont-min-icon

ராமத்தம் அருகே கல்லைக்கட்டி தொழிலாளி உடல் கிணற்றில் வீசப்பட்ட சம்பவத்தில் 27 பவுன் நகையை திருடியதால் தந்தை, மகன் சேர்ந்து அவரை கொன்றது விசாரணையில் தொியவந்துள்ளது.

விழுப்புரம்

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ளது வெங்கனூர் கிராமம். இந்த கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள விவசாய கிணற்றில் ஆண் ஒருவர் கடந்த 26-ந்தேதி பிணமாக மீட்கப்பட்டார். அவரது இருகால்களிலும் கல் ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது.

மேலும், அவரது உடல் நரம்பு வலை மற்றும் டிஜிட்டல் பேனர் ஆகியன கொண்டு சுற்றி வைக்கப்பட்டு இருந்தது.

அந்த உடலை கைப்பற்றிய ராமநத்தம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனிப்படை அமைப்பு

இறந்தவர் யார் என்று தெரியாத போதிலும், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அதே நேரத்தில், கிணறு தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருப்பதால், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து உடலை போட்டு சென்று இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு வலுத்தது.

அதன் அடிப்படையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா தலைமையில் தனிப்படை அமைத்து இறந்தவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தையல் கடை மூலம் துலங்கிய துப்பு

இதனிடையே, இறந்தவரின் சட்டை காலரில், அதை தைத்த கடையின் முகவரி இருந்தது. அதில் விழுப்புரத்தில் பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு கடையின் பெயர் இருந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தையல் கடைக்கு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜம்புலிங்கம், கோபிநாத் ஆகியோர் கொண்ட போலீசார் சென்று விசாரித்தனர்.

அப்போது, அந்த தையல் தொழிலாளி, அந்த பகுதியில் நகை செய்து கொடுக்கும் தொழிலாளிகளுக்கு சட்டைகளை தைத்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, நகை செய்யும் தொழிலாளர்களின் சங்கத்தினரிடம், சட்டையை காண்பித்து விசாரித்த போது, அதில், அந்த சட்டை விழுப்புரம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த தங்க நகை செய்யும் தொழிலாளி ஏழுமலை (வயது 39) என்பதும் தெரியவந்தது. திருமணம் ஆகாதவர் என்பதும் தெரியவந்தது.

நகை திருடியதாக புகார்

இதற்கிடையே, செஞ்சி அருகே உள்ள ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் (26) என்பவர், நகை செய்யும் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம், ஏழுமலை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது, கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி பட்டறையில் நகை செய்வதற்காக இருந்த 27½ பவுன் (220 கிராம்) தங்கத்தை ஏழுமலை திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் கார்த்திக் தரப்பினர் ஏழுமலையிடம் நகையை திருப்பி கேட்டும் அவர் தரவில்லை. அதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்ததும், தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

தந்தையுடன் தப்பி ஓட்டம்

இதையடுத்து கார்த்திக்கிடம் விசாரிக்க போலீசார் ஈச்சங்குப்பத்துக்கு சென்றனர். ஆனால் போலீஸ் வருவது பற்றி அறிந்த அவர் தனது அண்ணன் தீனதயாளன் (27), தந்தை ராஜேந்திரனுடன் 2 மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். அவர்களில் கார்த்திக், தீனதயாளன் ஆகியோரை போலீசார், சினிமா பட பாணியில் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

வீட்டில் அடைத்து வைத்து அடித்து கொலை

நகை பட்டறையில் இருந்து நகையை திருடி சென்ற ஏழுமலையை கார்த்திக் தரப்பினர் தேடி வந்துள்ளனர். அதில், அவர் திருச்செந்தூரில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த 21-ந்தேதி கார்த்திக், தீனதயாளன் ஆகியோர் திருச்செந்தூருக்கு சென்றனர். அங்கு ஏழுமலையை மடக்கி பிடித்து, பஸ்சில் ஈச்சங்குப்பத்தில் உள்ள கார்த்திக் வீட்டுக்கு அன்றைய தினம் இரவே அழைத்து வந்தனர்.

தோட்டத்தில் ஏழுமலையை, தீனதயாளன் அவரது தந்தை ஆகியோர் நகையை திரும்ப கேட்டு அடித்து உதைத்தனர். அப்போது அவர் தப்பித்து ஓட முயன்ற போது உருட்டு கட்டையால் காலில் அடித்தனர். அதில் சத்தம் போடவே, கட்டையால் அவரது கழுத்திலும் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை இறந்துவிட்டார்.

கொலையை மறைக்க திட்டம்

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அவர்கள், உடலை எங்காவது கொண்டுபோய் போட்டு கொலையை மறைக்க திட்டம் போட்டனர்.

அதன்படி, 22-ந்தேதி இரவு தீனதயாளன், அவரது தந்தை ராஜேந்திரன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில், ஏழுமலையின் உடலை எடுத்துக்கொண்டு, தங்களது வீட்டில் இருந்து புறப்பட்டனர்.

அவர்கள், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபடி, உடலை போடுவதற்கான இடத்தை தேடி வந்தார்கள். அதில், இரவு 11 மணிக்கு கடலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்துக்கு வந்தனர். அந்த பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. மேலும் அங்கு சாலையோரம் கிணறு ஒன்று இருந்ததையும் அவர்கள் பார்த்தனர்.

அண்ணன், தம்பி கைது

இதுதான் சரியான இடம் என்று தீர்மானித்த அவர்கள், ஏழுமலையின் உடலை நரம்பு வலை, டிஜிட்டல் பேனர், வைக்கோல் ஆகியவை கொண்டு சுற்றினர். மேலும் அவரது காலில் அங்கு கிடந்த கல்லை எடுத்துக்கட்டினர். பின்னர் கிணற்றில் உடலை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, 26-ந்தேதி ஏழுமலையின் உடல் அழுகிய நிலையில் வெளியே வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கார்த்திக், தீனதயாளன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story