மொபட் மீது லாரி மோதல்; தந்தை- மகன் சாவு


கெங்கவல்லி அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை- மகன் பரிதாபமாக இறந்தனர்.

சேலம்

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை- மகன் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

பெயிண்டர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சதாம் உசேன் (வயது 35). இவருக்கு ஷகிலா (30) என்ற மனைவியும், அப்துல் பாசித் என்ற 4 வயது சிறுவனும் உள்ளனர். ஷகிலாவின் பெற்றோர் வீடு தம்மம்பட்டியில் உள்ளது.

சதாம் உசேன் பெயிண்ட் வேலை செய்து வருவதால் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய இருந்தது. இதனால் மனைவியை அவருடைய பெற்றோருடன் தம்மம்பட்டியில் தங்க சொல்லி இருந்தார்.

லாரி மோதியது

இதற்கிடையே வெளியூர் சென்று இருந்த சதாம் உசேன் தம்மம்பட்டிக்கு வந்தார். பின்னர் தன்னுடைய தந்தையை பார்க்க கடம்பூருக்கு புறப்பட்டார். அப்போது மகன் அப்துல் பாசித்தையும் உடன் அழைத்துக் கொண்டு தன்னுடைய மொபட்டில் புறப்பட்டார்.

74 கிருஷ்ணாபுரம் அருகே பொங்காளியம்மன் கோவில் பகுதியில் சென்ற போது, அந்த வழியாக ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி சதாம் உசேன் சென்ற மொபட் மீது மோதியது.

தந்தை- மகன் சாவு

இதில் லாரி நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. மொபட்டில் தந்தையுடன் வந்த அப்துல் பாசித் சம்பவ இடத்திலேயே பலியானான். படுகாயம் அடைந்த சதாம் உசேனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சதாம் உசேன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் லாரியை ஓட்டி வந்த நடுவலூர் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த முருகன் (40) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விபத்தில் தந்தை- மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story