தந்தை-மகன் தற்கொலை


தந்தை-மகன் தற்கொலை
x

அறந்தாங்கியில் தந்தை-மகன் தற்கொலை செய்து கொண்டனர். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி:

பானிபூரி வியாபாரம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 68). இவரது மகன் குணசீலன் (28). மகள்கள் வரலட்சுமி, அனிதா. இவர்களது வீட்டில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் மகள்கள் இருவரும் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். மோகனும், குணசீலனும் கோவில் திருவிழா நடைபெறும் ஊர்களுக்கு சென்று சிப்ஸ் வியாபாரம், பானிபூரி கடை போட்டு பிழைப்பு நடத்தி வந்தார்கள். மேலும் ஒரு சில கோவில் முக்கிய திருவிழாக்களில் அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்து வியாபாரம் பார்த்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 தினங்களாக மோகன் வீட்டின் கதவு பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது.

தந்தை-மகன் உடல்கள்

இவரது மகள்கள் தந்தையும்-அண்ணனும் வெளியூரில் தங்கி வியாபாரம் பார்த்து வருகிறார்கள் என நினைத்து கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது குணசீலன் கயிற்றால் தூக்குமாட்டி இறந்த நிலையிலும், மோகன் கீழே இறந்த நிலையிலும் கிடந்து உள்ளனர். மேலும் அழுகிய நிலையில் இருவரின் உடல்களும் இருந்துள்ளது. தந்தை-அண்ணன் ஆகியோர் உடல்களை பார்த்து வரலட்சுமி, அனிதா கண்ணீர் விட்டு கதறி அழுதது, அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இதற்கிடையே போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தை-மகன் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story