ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி மதுரையில் வணிகர் சங்க பேரமைப்பு உண்ணாவிரதம்
அரிசி, பருப்பு, பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி மதுரையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் விக்கிரம ராஜா கூறினார்.
அரிசி, பருப்பு, பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி மதுரையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் விக்கிரம ராஜா கூறினார்.
பேட்டி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று திருப்பத்தூருக்கு வந்தார். பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சுதந்திரம் அடைந்த எந்த ஒரு அரசும் இதுவரை அரிசி, பருப்பு, பால், தயிர், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்ததில்லை. முதன்முறையாக மத்திய அரசு இவற்றுக்கு வரி விதித்துள்ளது.
முதல் கட்டமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக் கோரி சென்னையில் கலைவாணர் அரங்கம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து அரிசி, பருப்பு, பால், தயிர், வெண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளோம்.
உண்ணாவிரதம்
அடுத்த கட்டமாக ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி மதுரையில் அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்.
10 கிலோ முதல் 25 கிலோ வரை உள்ள மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்படாத அரிசி மற்றும் பால் வகைகளுக்கு வரி இல்லை என்று மத்திய மந்திரி கூறி இருப்பது ஏற்கக் கூடியது அல்ல.எப்.எப்.எஸ்.ஸி. உணவு பாதுகாப்பு சட்டப்படி பொருட்களை பாக்கெட்டில் அடைக்காமல் விற்பனை செய்யக்கூடாது என கூறுகிறார்கள். அப்படி விற்பனை செய்தால் அதற்கு அபராதம் விதிக்கிறார்கள்.
சமையல் எண்ணெய் போன்ற பொருட்களுக்கு அதானி நிறுவனம் தான் விலை நிர்ணயம் செய்கிறது. சில்லரை வணிகர்களை பாதுகாக்க தமிழ்நாடு வணிகர்களின் பேரமைப்பு சார்பில் பல கட்ட முயற்சிகளை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது எண்ணெய் வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.தாமோதரன், செயலாளர் என்.வடிவேல், வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன், ராஜா ராணி தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்