பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
தூத்துக்குடி அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் நுங்க பறிக்க பனைமரத்தில் ஏறிய தொழிலாளி தவறிவிழுந்து பரிதாபமாக பலியானார்.
பனைஏறும் தொழிலாளி
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுத்துரை. பனையேறும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் நுங்கு பறிப்பதற்காக வீட்டுக்கு அருகிலுள்ள பனை மரத்தில் ஏறி உள்ளார்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக பனை மரத்திலிருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவு
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்தார். அவருக்கு பொன்னுத்தாய் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் முத்தையாபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.