பஸ்சிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
முக்காணி அருகே பஸ்சிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
ஆறுமுகநேரி:
காயப்பட்டினம் அழகாபுரி பகுதிைய சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 60). இவர் தூத்துக்குடியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். ராமேஸ்வரத்திலிருந்து வந்த அந்தபஸ்சின் பின் இருக்கையில் அவர் அமர்ந்து பயணம் செய்துள்ளார். முக்காணி அருகேயுள்ள கொடுங்கணி விலக்கில் ரோட்டின் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள தடுப்புகளுக்கு இடையில் டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிதம்பரம் பஸ்சிலிருந்து சாலையில் தவறி விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி
நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்த புகாரின் பேரில் டிரைவர் வீராசாமி, கண்டக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் மீது ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மானிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.