திட்டக்குடி அருகே அரசு பள்ளி காலை உணவு திட்ட பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
திட்டக்குடி அருகே அரசு பள்ளி காலை உணவு திட்ட பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டக்குடி,
பணி மேற்பார்வையாளர்
திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29). திட்டக்குடியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் விருத்தாசலம் அடுத்த பரவலூரை சேர்ந்த உறவினரான ஜெயஸ்ரீ (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனுசிங்(1½) என்ற ஆண் குழந்தை உள்ளது.
ஜெயஸ்ரீ தொளார் அரசு தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். மணிகண்டன் நேற்று காலை திட்டக்குடி நிதி நிறுவனத்துக்கு சென்றுவிட்டார். மாமனார் இளையபெருமாள் 100 நாள் வேலை திட்ட பணிக்கு சென்றுவிட்டார்.
ஜெயஸ்ரீயும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு பணிபுரிந்த காலை உணவு திட்ட சக ஊழியர்களிடம் நல்லூரில் நடைபெறும் காலை உணவு திட்டம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு வருவதாக கூறிச் சென்றார்.
தூக்கில் பிணம்
இந்த நிலையில் அதே ஊரில் 100 நாள் வேலை திட்ட பணிக்கு சென்ற இளையபெருமாள் தண்ணீர் குடிப்பதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த இளையபெருமாள் அக்கம் பக்கத்தினர் மூலம் வீட்டின் மேற்கூரை ஓடுகளை பிரித்து பார்த்தபோது, ஜெயஸ்ரீ தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சோகம்
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப தகராறு காரணமாக ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணி சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு பள்ளி காலை உணவு திட்ட பெண் பணி மேற்பார்வையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.