பிரான்ஸ் நாட்டு வாலிபரை கரம்பிடித்த பெண் என்ஜினீயர்


பிரான்ஸ் நாட்டு வாலிபரை கரம்பிடித்த பெண் என்ஜினீயர்
x

வாழப்பாடியை சேர்ந்த பெண் என்ஜினீயர், பிரான்ஸ் நாட்டு வாலிபரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி நேற்று திருமணம் செய்து கொண்டார்.

சேலம்

வாழப்பாடி:

வாழப்பாடியை சேர்ந்த பெண் என்ஜினீயர், பிரான்ஸ் நாட்டு வாலிபரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி நேற்று திருமணம் செய்து கொண்டார்.

பெண் என்ஜினீயர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சுகந்தி. இவர்களின் மூத்த மகள் கிருத்திகா (வயது 29).

என்ஜினீயரான இவர், சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வணிக மேம்பாட்டு துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், இவரோடு பணிபுரிந்த பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தை சேர்ந்த பென்னடி-அட்மா ஊஜேடி தம்பதியரின் மகனான என்ஜினீயர் அசானே ஒச்சோயிட் (31) என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

திருமணம்

இதுகுறித்து கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றுள்ளார். அசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் இருந்து மணமகனின் உறவினர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்திற்கு வந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பெண் அழைப்பு நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்றனர்.

சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக நடைபெற்ற இந்த திருமண விழாவில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மணமகன் அசானே ஒச்சோயிட், தனது காதலி கிருத்திகாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

வேட்டி, சேலையில் அசத்தல்

இந்த திருமண விழாவில், வாழப்பாடியை சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டில் இருந்து மணமகனின் உறவினர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக மணவிழாவிற்கு வந்த பிரான்ஸ் நாட்டினர், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை, சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்து திருமணத்தில் பங்கேற்று அனைவரையும் வியக்க வைத்தனர்.

நமது உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பார், சட்னி, இடியாப்பம் அல்வா ஆகியவற்றை, பிரான்ஸ் நாட்டினர் விரும்பி உண்டு மகிழ்ந்தனர்.

தமிழர்கள் உணர்ச்சிபூர்வமாக திருமணம் செய்தது எங்களை நெகிழ வைத்தது. இவர்களது விருந்து உபசரிப்பும், உணவுகளும் மிகவும் சுவையாக இருந்தது என, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அசானே ஒச்சோயிட் உறவினர்கள் தெரிவித்தனர்.


Next Story