ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது
குடும்பத் தகராறு வழக்கை முடித்து வைக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வில்லிவாக்கம்,
கோவையை பூர்வீகமாக கொண்டவர் மோனிகா ஸ்ரீ. இவருக்கும், சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் வினோத்குமார் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது 200 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுப்பதாக மோனிகா ஸ்ரீயின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால் பேசியபடி 200 பவுன் கொடுக்கவில்லை எனக்கூறி மோனிகா ஸ்ரீயை அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மோனிகா ஸ்ரீ, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோனிகா ஸ்ரீயை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.
லஞ்சம் கேட்டார்
இந்தநிலையில் தற்போது இரு குடும்பத்தினரும் சமரசம் ஆகி விட்டனர். இதையடுத்து இந்த வழக்கை முடித்து வைக்க கோரி மோனிகா ஸ்ரீ, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதாவை அணுகினார்.
அதற்கு அவர், ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. மோனிகாஸ்ரீயும் ரூ.1 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் மேலும் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என மோனிகா ஸ்ரீயை பெண் இன்ஸ்பெக்டர் வற்புறுத்தினார்.
பெண் இன்ஸ்பெக்டர் கைது
ஆனால் பணம் கொடுக்க முன்வராத மோனிகா ஸ்ரீ, இதுபற்றி சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை மோனகா ஸ்ரீயிடம் கொடுத்து, அதனை லஞ்சமாக இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.
அதன்படி அந்த பணத்தை மோனிகாஸ்ரீ லஞ்சமாக பெண் இன்ஸ்பெக்டர் அனுராதாவிடம் நேற்று கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த டி.எஸ்.பி. லவக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் அனுராதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது ஏற்கனவே அனுராதா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.