பெண் தலைவர்கள் தங்கள் பணிகளை செய்ய வேண்டும்


பெண் தலைவர்கள் தங்கள் பணிகளை செய்ய வேண்டும்
x

கணவர், மகன்கள் தலையிடுவதை தவிர்த்து பெண் தலைவர்கள் தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

கணவர், மகன்கள் தலையிடுவதை தவிர்த்து பெண் தலைவர்கள் தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

ஆய்வு கூட்டம்

தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஊராட்சிகளுக்கு மத்திய அரசு, மாநில அரசு மூலம் ஒதுக்கக்கூடிய பசுமை வீடு திட்டம், இந்திரா காந்தி குடியிருப்பு திட்டம், தனிநபர் கழிவறை, உறிஞ்சி குழி ஆகிய பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட பணிகளை இதுவரை செய்யாமல் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களிடம் தனித்தனியாக ஏன் பணிகள் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். பின்னர் கலெக்டர் தனித்தனியாக உங்கள் ஊருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் எத்தனை? இன்னும் 2 மாதத்தில் எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

விருது வழங்கப்படும்

அரசு ஒதுக்கக்கூடிய நிதியை சரியான முறையில் பயன்படுத்தி பணிகள் செய்யும் ஊராட்சிகளை தேர்வு செய்து சிறந்த ஊராட்சிக்கான விருது வழங்கப்படும்.

பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ள ஊராட்சியில் அவர்களுடைய கணவர், மகன்கள் தலைவர் செய்யக்கூடிய வேலைகளை செய்கிறார்கள் என்று புகார்கள் வருகின்றன. அப்படி இல்லாமல் பெண் தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பணிகளை அவர்களே செய்ய வேண்டும்.

படிக்கத் தெரியாத தலைவர்கள் படிக்கத் தெரிந்த ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு ஆவணங்களில் கையெழுத்து போட வேண்டும். பஞ்சாயத்து சட்டம் என்றால் என்ன என்று உங்களுக்கு வழங்கி உள்ள புத்தகத்தில் உள்ளது. ஒவ்வொரு தலைவரும் இந்த புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

வீடு கட்டுவதற்கு உண்டான ஆணையை வழங்கி இதுவரை வீடுகட்டாமல் இருக்கும் பயனாளிகளிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவுரை வழங்கி வீடு கட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், துணைத்தலைவர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மகாதேவன், மேலாளர் கோவிந்தராஜ் உள்பட அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story