சேலம் கன்னங்குறிச்சியில் பெண் போலீஸ், வங்கி மேலாளர் வீடுகளில் நகை-பணம் திருட்டு இரும்பு கம்பியால் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை


சேலம் கன்னங்குறிச்சியில்  பெண் போலீஸ், வங்கி மேலாளர்   வீடுகளில் நகை-பணம் திருட்டு  இரும்பு கம்பியால் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
x

சேலம் கன்னங்குறிச்சியில் பெண் போலீஸ், வங்கி மேலாளர் ஆகியோரது வீடுகளில் நகை, பணம் திருட்டு போனது. இரும்பு கம்பியால் கதவை உடைத்து மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம்

கன்னங்குறிச்சி,

பெண் போலீஸ்

சேலம் கன்னங்குறிச்சி மோட்டாங்குறிச்சி தனலட்சுமி நகரை சேர்ந்தவர் இம்ரான்கான் (வயது 34). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மசூதா.

இவர் சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இதனால் கன்னங்குறிச்சியில் உள்ள வீட்டில் இம்ரான்கானின் தாயார் சப்ராபேகம் மட்டும் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை இம்ரான்கானின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து இம்ரான்கானுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவரது வீட்டுக்கு உறவினர்கள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த வெள்ளி மற்றும் பித்தளை பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

வங்கி மேலாளர்

இதேபோல் இம்ரான்கானின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ராஜா (33). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ராஜா வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த 7½ பவுன் நகை மற்றும் ரூ.55 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

பெண் போலீஸ், வங்கி மேலாளர் ஆகியோரது வீடுகளில் திருட்டு போனது குறித்து தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

விசாரணையில், மர்ம நபர்கள் முதலில் இம்ரான்கான் வீட்டுக்கு சென்று பொருட்களை திருடிவிட்டு, அவரது வீட்டு மொட்டைமாடி வழியாக பின்னால் உள்ள ராஜாவின் வீட்டுக்குள் நுழைந்து திருடி உள்ளனர். மேலும் அவர்கள் 2 வீடுகளில் உள்ள மரக்கதவுகளை இரும்பு கம்பியால் உடைத்துள்ளனர்.

இந்த திருட்டு நடந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீடுகளுக்குள் நுழைந்து நகை, பணம் மற்றும் பொருட்களை திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் அந்த கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டாங்குறிச்சி பகுதியில் உள்ள 2 வீடுகளில் திருட முயன்றதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த திருட்டுகளில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண் போலீஸ், வங்கி மேலாளர் வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story