பதிவு திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியதாக கூறி போலீஸ்காரர் வீட்டு முன்பு பெண் போலீஸ் தர்ணா
பதிவு திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியதாக கூறி போலீஸ்காரர் வீட்டு முன்பு பெண் போலீஸ் தர்ணா போராட்டத்தில ஈடுபட்டார்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள தண்டலையைச் சேர்ந்த கோவிந்தராஜன் மகன் அஜித்(வயது 28). இவர், சென்னை பெருநகர போலீஸ் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார்.
தண்டலையில் உள்ள இவரது வீட்டு முன்பு திருவாரூர் அருகே உள்ள கேக்கரை பகுதியை சேர்ந்த மதுமிதா(29) என்பவர், தன்னை போலீஸ்காரர் அஜித் பதிவு திருமணம் செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
காதல்
போராட்டத்தில் ஈடுபட்ட மதுமிதா கூறியதாவது:-
சென்னை பெருநகர போலீஸ் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை போலீஸ்காரராக பணிபுரியும் அஜித்துடன் நான் பணியாற்றி வந்தேன். எங்களுக்குள் காதல் ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டில் தங்கி வேலை பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுவதாக அறிந்தேன்.
கோவிலில் திருமணம்
நான் இதுகுறித்து அவரிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். இதனையடுத்து என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அஜித் சில நாட்களிலேயே தலைமறைவானார்.
இதனையடுத்து நான் மீண்டும் புகார் அளித்தேன். எனது புகார் தொடர்பாக மனு ரசீது வழங்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி மண்ணடி மாரியம்மன் கோவிலில் நாங்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணத்தை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டோம்.
திரும்பி வரவில்லை
திருமணம் முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்ற அஜித் திரும்பி வரவில்லை. இதனால் அஜித் வீட்டு முன்பு நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா போலீசார், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி மதுமிதாவை அழைத்து சென்று அவருடைய உறவினர் வீட்டில் விட்டனர்.
பரபரப்பு
பதிவு திருமணம் செய்துவிட்டு தன்னை ஏமாற்றியதாக போலீஸ்காரர் வீட்டு முன்பு பெண் போலீஸ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.