பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.4 ஆயிரம் அபராதம்
பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய நெல்லை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து சாத்தான்குளம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தட்டார்மடம்:
பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய நெல்லை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து சாத்தான்குளம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வீட்டு கழிவுநீர் செல்வதில் பிரச்சினை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தைச் சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மனைவி ஜான்சிராணி. இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி மெரின் (வயது 53) என்பவருக்கும் இடையே வீட்டு கழிவுநீர் செல்வது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
இதுகுறித்து கடந்த 12-2-2015 அன்று மெரின் சாத்தான்குளம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது இதனை விசாரித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீகா, இதுதொடர்பாக விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு வருமாறு ஜான்சிராணியை அழைத்தார். ஆனால் அவர் விசாரணைக்கு வராததால், சப்-இன்ஸ்பெக்டர் மீகா மீரான்குளத்தில் உள்ள ஜான்சிராணியின் வீட்டுக்கு சென்றார்.
அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்
அப்போது வீட்டில் குளியல் அறையில் ஜான்சிராணி குளித்து கொண்டிருந்தார். அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மீகா, ஜான்சிராணியின் தலைமுடியை பிடித்து வெளியே அரைநிர்வாணமாக இழுத்து வந்து தாக்கினார். இதில் காயமடைந்த ஜான்சிராணி, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், இதுகுறித்து சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து தனி வழக்கு தொடர்ந்தார்.
ரூ.4 ஆயிரம் அபராதம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, ஜான்சிராணியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீகாவுக்கு ரூ.4 ஆயிரமும், இதற்கு உடந்தையாக இருந்த மெரினுக்கு ரூ.1,000-ம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
சப்-இன்ஸ்பெக்டர் மீகா தற்போது பதவி உயர்வு பெற்று நெல்லையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த வழக்கை தொடர்ந்த ஜான்சிராணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை தொடர்ந்து அவருடைய கணவர் மோசஸ் தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.