ரெயிலில் பெண் போலீசுக்கு கத்திக்குத்து: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது - குஷ்பு
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது என குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 23-ந்தேதி இரவு செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில் புறப்பட்டது. அந்த ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறிய போதை ஆசாமி ஒருவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஆசிர்வா கீழே இறங்கும்படி கூறி இருக்கிறார்.
உடனே ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பெண் போலீஸ் ஆசிர்வாவை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்த சம்பவம் கடற்கரை ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒரு பெண் போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. போலீசுக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.