பயிற்சியின்போது கத்தி குத்தியதில் பெண் போலீஸ் படுகாயம்


பயிற்சியின்போது கத்தி குத்தியதில் பெண் போலீஸ் படுகாயம்
x

பயிற்சியின்போது கத்தி குத்தியதில் பெண் போலீஸ் படுகாயமடைந்தார்.

திருச்சி

திருச்சி:

பெண் போலீசாருக்கு பயிற்சி

திருச்சியை அடுத்த நவல்பட்டு பகுதியில் பெண் போலீசாருக்கான பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு காவல்துறையில் புதிதாக பணிக்கு சேர்ந்த பெண் போலீசாருக்கு 7 மாத கால அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஓட்டம், கவாத்து, துப்பாக்கிகளை கையாளுதல், அணிவகுப்பு, சட்ட வகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நேற்று காலை 6 மணி அளவில் வழக்கம்போல் பெண் போலீசார் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது துப்பாக்கியுடன் ஓடிச்சென்று தடுப்புகளை தாண்டி குதிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பெண் போலீஸ் தங்கம் (வயது 24) கலந்து கொண்டு தடுப்புகளை தாண்டி ஓடி பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் துப்பாக்கி முனையில் சொருகப்பட்டு இருக்கும் பைனட் என்ற கத்தியை உறையுடன் இடுப்பில் மாட்டி இருந்தார். பயிற்சியின்போது, அவர் துப்பாக்கியை 2 கைகளால் பிடித்து கொண்டு தரையில் அமர்ந்து குதித்து குதித்து சென்றார்.

கத்தி குத்தி படுகாயம்

அப்போது, எதிர்பாராதவிதமாக கத்தி அவரது பின்பக்க இடது தொடையில் ஆழமாக குத்தியது. இதில் பெண் போலீஸ் தங்கம் படுகாயம் அடைந்து வலியால் அலறி துடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயிற்சியாளர்கள் மற்றும் சக பெண் போலீசார் உடனடியாக தொடையில் குத்திய கத்தியை அகற்ற முயன்றனர். ஆனால் அகற்ற முடியாததால் கத்தியுடன் தங்கத்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கத்தியை அகற்றும்போது நரம்புகள் வெட்டுப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியதால், அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் கத்தி அகற்றப்பட்டது. பயிற்சியில் ஈடுபட்ட பெண் போலீசுக்கு கத்தி குத்தி பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பயிற்சி பள்ளியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பற்றி நவல்பட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story