தபால் பெண் ஊழியர் ஏரியில் தவறி விழுந்து பலி


தபால் பெண் ஊழியர் ஏரியில் தவறி விழுந்து பலி
x

குடியாத்தம் அருகே இருமுடிகட்டி கோவிலுக்கு செல்ல தயாராக இருந்த தபால் பெண் ஊழியர் ஏரியில் மூழ்கி பலியானார்.

வேலூர்

கோவிலுக்கு செல்ல

குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் ஏரிப்பட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் மகாலட்சுமி (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. கணவனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். மகாலட்சுமி தபால் துறையில் தற்காலிகமாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மகாலட்சுமி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து இருமுடி கட்டி இருந்தார். அதற்காக நேற்று காலையில் சக பக்தர்களுடன் மேல்மருவத்தூர் செல்ல எர்த்தாங்கல் கெங்கையம்மன் கோவில் அருகே பஸ்சில் புறப்பட தயாராக இருந்துள்ளார்.

ஏரியில் மூழ்கி பலி

அப்போது இயற்கை உபாதைக்காக அருகே உள்ள எர்த்தாங்கல் ஏரிக் கரை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். பஸ்சில் இருந்தவர்கள் மகாலட்சுமி நீண்டநேரமாகியும் வராததால் சந்தேகம் அடைந்து ஏரிப் பகுதிக்கு சென்று பார்த்தபோது ஏரியில் மகாலட்சுமி மிதந்து கொண்டிருந்தார்.

உடனடியாக கிராம மக்கள் உதவியுடன் மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் மகாலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளே ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story