ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது


ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது
x

மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விபசார தடுப்பு பிரிவு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். அவருடைய ஸ்கூட்டர் இருக்கையில் கட்டு, கட்டாக இருந்த ரூ.5½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விபசார தடுப்பு பிரிவு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். அவருடைய ஸ்கூட்டர் இருக்கையில் கட்டு, கட்டாக இருந்த ரூ.5½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மசாஜ் சென்டர் உரிமையாளர்

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரத். இவருடைய மனைவி அஜிதா (வயது 35). இவர் திருச்சி சத்திரம் பஸ்நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில் திருச்சி மாநகர விபசார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் சோதனை நடத்தினர்.

அத்துடன், அந்த மசாஜ் சென்டர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்போது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். போலீஸ் வழக்கு காரணமாக மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக வரவில்லை. இதனால் அந்த வழக்கை தனக்கு சாதகமாக முடித்து தரும்படி அஜிதா விபசார தடுப்பு பிரிவு போலீசாரை அணுகி உள்ளார்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

அப்போது, வழக்கை சாதகமாக முடித்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி விபசார தடுப்பு பிரிவு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமா (56) அஜிதாவிடம் கேட்டுள்ளார். ஏற்கனவே மசாஜ் சென்டரில் போதிய வருமானம் வராததால், தன்னால் மசாஜ் சென்டரை நடத்த முடியாத நிலையில் இருப்பதால் தன்னால் ரூ.10 ஆயிரம் தரமுடியாது என்று கூறியுள்ளார்.

ஆனாலும், அவரை விடாத சப்-இன்ஸ்பெக்டர் ரமா, இப்போது முன்பணமாக ரூ.3 ஆயிரம் கொடுத்தால், வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தருகிறேன். அதன்பிறகு மீதி தொகையை கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா, இதுபற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் கைது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், ரூ.3 ஆயிரத்துக்கு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அஜிதாவிடம் கொடுத்து, அந்த பணத்தை லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கும்படி கூறினார். அதை பெற்றுக்கொண்ட அஜிதா, நேற்று காலை 11 மணி அளவில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள விபசார தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு சென்று, ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை சப்-இன்ஸ்பெக்டர் ரமாவிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கி, சப்-இன்ஸ்பெக்டர் ரமா எண்ணிக்கொண்டிருந்த போது, அங்கு சாதாரண சீருடையில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ரமாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், விபசார தடுப்பு பிரிவு அலுவலகத்திலும், சப்-இன்ஸ்பெக்டர் ரமாவின் வீடு மற்றும் அவருடைய இருசக்கர வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல்

அப்போது, ரமாவின் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டு, கட்டாக ரூ.500 நோட்டுகள் இருந்தன. அதை கைப்பற்றி எண்ணிய போது, அதில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் இருந்தது. இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் ரமாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறினார்.

அத்துடன் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணம் மசாஜ் சென்டர் உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ரமாவை திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி கார்த்திகேயன் முன் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரமா திருச்சி பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலைய வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.


Next Story