பெண் தற்கொலை; கணவருக்கு கத்திக்குத்து
கொட்டாம்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக மைத்துனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக மைத்துனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடும்ப தகராறு
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள பெரியகற்பூரம்பட்டியை சேர்ந்தவர் செல்வமணி (வயது 45). கொத்தனார். இவருக்கு திருமணமாகி காத்தம்மா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிைடயே 10 ஆண்டுக்கு முன்பு ஆலம்பட்டியை சேர்ந்த மீனாட்சி (30) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். 2 மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் செல்வமணி வசித்து வருகிறார். இந்நிலையில் காத்தம்மா, மீனாட்சி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காத்தம்மா வயலில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். மீனாட்சி, தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் இருந்துள்ளார்.
பெண் தற்ெகாலை
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த மீனாட்சி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீனாட்சியின் தம்பி வடிவேல் (27), உறவினர்கள் செல்லப்பா (45), சோனையன் (42) ஆகியோர் செல்வமணியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த வடிவேல், அக்காள் கணவர் செல்வமணியின் கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
3 பேர் கைது
இதற்கிடையே தற்கொலை செய்து ெகாண்ட மீனாட்சியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேல், செல்லப்பா, சோனையன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.