ெபண் வார்டு உறுப்பினர், கணவர் மீது தாக்குதல்
சவ ஊர்வலத்தின்போது மாலைகள் வீட்டுக்குள் வீசப்பட்டதை தட்டிக்கேட்ட பெண் வார்டு உறுப்பினர், கணவரை தாக்கியதாக போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
சவ ஊர்வலத்தின்போது மாலைகள் வீட்டுக்குள் வீசப்பட்டதை தட்டிக்கேட்ட பெண் வார்டு உறுப்பினர், கணவரை தாக்கியதாக போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சுடுகாட்டுக்கு இடம் கொடுத்தவர்
திருப்பத்தூர் அருகே சு.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜனின் மகன் குமார் (வயது 44). இவர், தனக்கு சொந்தமான இடத்தை சுடுகாட்டுக்கு எழுதி வைத்துள்ளார். இவர்களுடைய நிலம், வீடு ஆகியவை சுடுகாடு அருகே உள்ளன.
நேற்று சு.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்து விட்டார். அவரின் பிணத்தைப் புதைப்பதற்காக கிராமத்தினரும் உறவினர்களும் சுடுகாட்டுக்குக் கொண்டு வரும்போது, பிணத்தின் மீது போடப்பட்டு இருந்த மாலைகளை எடுத்து யாரோ குமாருடைய வீட்டின் உள்ளே வீசி உள்ளனர். மேலும் அவரின் வீட்டின் சுற்றுச்சுவர் மீது வாலாபட்டாசை வைத்து வெடித்துள்ளனர்.
தாக்குதல்
இதையறிந்த குமாரும், அவருடைய மனைவியும் வார்டு உறுப்பினருமான சுஜாதா (வயது 40) ஆகியோர் வெளிேய வந்து, வீட்டுக்கு உள்ளே இரு சக்கர வாகனம் உள்ளது. நீங்கள் வெடித்த பட்டாசு சிதறி வந்து இருசக்கர வாகனத்தின் மீது விழுந்துள்ளது. அதில் வீடு தீப்பிடித்து எரிந்தால் என்ன செய்வது? மேலும் பிணத்தின் மேல் போடப்பட்டு இருந்த மாலைகளை எடுத்து வீட்டின் உள்ளே வீசி உள்ளீர்கள்? நீங்கள் செய்தது நியாயமா? எனத் தட்டிக் கேட்டுள்ளனர்.
அதற்கு, அதே ஊரை சேர்ந்த பூவரசன், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சுப்பிரமணி வீரன் என்ற வீரராகவன், சோமசுந்தரம், மாது ஆகியோர் சேர்ந்து குமார் மற்றும் சுஜாதாவை கை மற்றும் கற்களால் தாக்கினர். அதில் காயம் அடைந்த சுஜாதா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசில் புகார் மனு
இதையடுத்து குமார், அவருடைய உறவினர்கள் திரண்டு வந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு, சவ ஊர்வலத்தின்போது தகாத செயல்களில் ஈடுபட்டவர்களையும், கணவன், மனைவியை தாக்கியவர்களையும் உடனடியாக கைது செய்யக்கோரி புகார் மனு கொடுத்தனர்.