குளச்சலில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன
குமரி ேமற்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைக் காலம் நீங்கியது. இதையடுத்து குளச்சலில் இருந்து விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.
குளச்சல்:
குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைக் காலம் நீங்கியது. இதையடுத்து குளச்சலில் இருந்து விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.
தடைக்காலம்
மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப் படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 61 நாட்கள் தடை விதித்துள்ளது. அதன்பட கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31 -ந் தேதி வரையும் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.
குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் கடந்த ஜூன் 1-ந் தேதி தடைக்காலம் தொடங்கியதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன.
இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து வந்தனர். தடை நீங்குவதை யொட்டி விசைப்படகினர் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வந்தனர். அதன் ஒரு பகுதியாக விசைப்படகுகளில் ஐஸ் நிரப்பும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.
கடலுக்கு சென்றனர்
இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நீங்கியது. இதையடுத்து நேற்று அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்கள் மீன் கிடைப்பதை பொறுத்து 5 முதல் 10 நாட்களுக்குள் கரை திரும்புவர்.
2 மாதங்களுக்கு பின் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க சென்றுள்ளதால் மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.