மாடுகள் மாலை தாண்டும் திருவிழா


மாடுகள் மாலை தாண்டும் திருவிழா
x

தரகம்பட்டி அருகே மாடுகள் மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது.

கரூர்

மாடுகள் மாலை தாண்டும் திருவிழா

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே கொண்டப்பநாயக்கனூரில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு முள்ளிப்பாடி மந்தையில் பாப்பகம்மாள்-எருதுகுட்டை கோவில் உள்ளது. இக்கோவிலில் முதல் முறையாக மாடுகள் மாலை தாண்டும் திருவிழா நடத்த ஊர் முக்கியஸ்தர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்தவாரம் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

திருவாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாடுகள் மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி திருவிழாவிற்கு வந்த 14 மந்தையர்களுக்கு முள்ளிப்பாடி மந்தை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அழைத்து வந்த மாடுகளுக்கு (எருது மாடுகள்) புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

சீறிப்பாய்ந்து ஓடியது

அதனைத்தொடர்ந்து தாரை, தப்பட்டை, உருமி முழங்க முள்ளிப்பாடி மந்தை எதிரே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு மாடுகள் அனைத்தும் அழைத்து செல்லப்பட்டது. அங்கு எல்லை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாடுகளுக்கு புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டு மாடுகள் மாலை தாண்டும் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட மாடுகள் முள்ளிப்பாடி மந்தையில் அமைக்கப்பட்ட எல்லை கோட்டை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடியது.

எலுமிச்சைபழம் பரிசு

இதில், கரூர் மாவட்டம் ஆர்.டி.மலை ஊராட்சி வாலியம்பட்டி கோனதாதா நாயக்கர் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து வெற்றி பெற்றது. 2-வது திருச்சி மாவட்டம், மாங்கரைப்பட்டி 5 மந்தை விரிகெஜ்சல் நாயக்கர் மந்தை மாடு ஓடிவந்தது. இதையடுத்து முதலாவதாக வந்த மாட்டிற்கு சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் கையில் வைத்திருந்த மஞ்சள் பொடி தூவப்பட்டு, எலுமிச்சைபழம் பரிசாக வழங்கப்பட்டன.

பின்னர் எல்லைக்கோட்டில் இருந்து தேவராட்டத்துடன் 3 கன்னி பெண்களும் முள்ளிப்பாடி பாப்பகம்மாள்-எருதுகுட்டை கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதில் ஊர்நாயக்கர், மந்தா நாயக்கர் மற்றும் திருச்சி, திண்டுக்கல், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story