புனித செபஸ்தியார் ஆலய திருவிழா
ஊட்டி அருகே புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
செபஸ்தியார் ஆலயம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சனக்கொரை பகுதியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் நடப்பாண்டில் ஆலயத்தின் 74-வது ஆண்டு திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் கொடியை ஏற்றி வைத்து ஆடம்பர திருப்பலியை நிறைவேற்றினார். இதை தொடர்ந்து எல்க்ஹில் புனித யூதா ததேயு ஆலய பங்கு தந்தை மைக்கேல், லவ்டேல் புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை பீட்டர், ஊட்டி மேய்ப்பு பணி மைய இயக்குனர் வின்சென்ட் தலைமையில் கடந்த ஒரு வாரமாக தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது.
திருப்பலி
இந்தநிலையில் விழாவின் கடைசி நாளான நேற்று மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அன்பின் விருந்து நடைபெற்றது. பின்னர் செபஸ்தியார் ஆலய ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித செபஸ்தியார் சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது.
ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் பாடல்களை பாடிய படியும், மெழுகுவர்த்தி ஏந்தியபடியும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சென்றனர். தேர் பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் போஸ்கோ மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.