பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா


பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவில் பங்குனி விழாவையொட்டி பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவில் பங்குனி விழாவையொட்டி பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

வாழைப்பழம் வீசும் திருவிழா

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நேற்று நடந்தது.

குழந்தை பாக்கியம்

முன்னதாக தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து ராதாகிருஷ்ண சாமியார் 3 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து மாப்பிள்ளை வீரன் கோவிலை அடைந்து கோவிலை சுற்றி வலம் வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது சாமியார் வாழைப்பழங்களை வீசினார்.

இந்த வாழைப்பழத்தை பிடித்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாழைப்பழத்தை போட்டி போட்டு பிடித்து சாப்பிட்டனர்.

மண்குதிரைகள்

தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு போட்டு, பொங்கல் வைத்து உருவச்சிலைகளை நேர்த்திக்கடனாக செலுத்தினர். விழாவில் 50-க்கும் மேற்பட்ட மண் குதிரைகளை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்து குதிரை விடும் நிகழ்ச்சியும், இரவு வாணவேடிக்கையும் நடைபெற்றது.

இதில் கோவில் செயல் அலுவலர் அறிவழகன், எழுத்தர் கார்த்தி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Next Story