126 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்


126 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்திட 126 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருத்துவ முகாம்

பருவநிலை மாற்றத்தால் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்திட அரசு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தினசரி 1000 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் 126 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் காய்ச்சல் கண்டவர்கள் மற்றும் வேறு உடல் உபாதைகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்திடவும், தேவைப்படுபவர்களுக்கு மேல் சிகிச்சைக்கான பரிந்துரையும் அளித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் களப்பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று காய்ச்சல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, காய்ச்சல் கண்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பள்ளிக்கு வராத மாணவர்கள்

இதுமட்டுமன்றி உள்ளாட்சியின் மூலம் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும். மேலும் கொசுப்புழு பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று கொசுப்புழு அளித்தல், புகை மருந்து அடித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யும் விதமாக உள்ளாட்சிகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்தல், குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்தல், குழிகுழாயினை அப்புறப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதேபோல் ஆர்.பி.எஸ்.கே. குழுவின் மூலம் பள்ளி மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு, தேவைப்படும் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்கள் குறித்த விவரத்தினை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர் பரிந்துரை

ஆகவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி காய்ச்சல் மருத்துவ முகாமில் பங்குபெற்று சிகிச்சை மேற்கொள்ளலாம். மேலும் டெங்குவை பரப்பும் கொசுவின் உற்பத்தியினை கட்டுப்படுத்திட தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திட வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி உட்கொள்வதையும் தவிர்த்திட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story