31 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்


31 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 31 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 31 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.

குமரியில் 31 இடங்களில்...

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்சன் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநிதி ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதைத்தொடர்ந்து டெங்கு பாதிப்பை தடுக்க தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சலை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட 31 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டகசாலியன்விளை அங்கன்வாடி மையம், இடலாக்குடி அங்கன்வாடி மையம் உள்பட 4 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

காய்ச்சல் பரிசோதனை

இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், லேப் டெக்னீஷியன்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டனர். பரிசோதனை முகாம்களில் அந்த பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் முகாம்களுக்கு வந்தவர்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது. இதேபோல் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், ராஜாக்கமங்கலம், மேற்புறம் உள்பட 9 ஒன்றியங்களிலும் தலா 3 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இப்படி மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் நடந்த காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய முகாமானது மாலை 6 மணி வரை நடந்தது.

அதிகாரிகள் தகவல்

குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதார அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

"குமரி மாவட்டத்தில் தற்போது தினசரி 30 முதல் 40 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். மேலும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் குழுவினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு நமது மாவட்டத்தில் பெரிய அளவில் இல்லை"

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story