வயல் நண்டு விற்பனை தீவிரம்
வடகாடு பகுதியில் வயல் நண்டுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வயல் நண்டுகள்
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை காலங்களில் நெல் வயல்கள் மற்றும் தண்ணீர் நிறைந்த ஏரி, குட்டைகள் ஆகியவற்றின் மூலம் உற்பத்தி ஆகக்கூடிய நண்டுகளை ஒரு சிலர் பிடித்து கிராமப்புற பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வயல் நண்டுகளை இடித்து ரசம் வைத்து குடிப்பதன் மூலம் மழைக்காலங்களில் வரக்கூடிய காய்ச்சல் மற்றும் சளி, இருமல் போன்றவை சரியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வடகாடு பகுதியில் வயல் நண்டு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விலை கொடுத்து வாங்கும் நிலை...
முன்பெல்லாம் அதிக மழைப்பொழிவு மற்றும் ரசாயன உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தாத காலங்களில் இப்பகுதிகளில் தாராளமாக வயல் நண்டுகள் கிடைத்தது. நண்டுகளை அக்கம் பக்கத்தினர் பிடித்து உற்றார் உறவினர்களிடம் இலவசமாக வழங்கி வந்தனர். தற்சமயம் இப்பகுதிகளில் தண்ணீர் அதிகம் தேங்கி நிற்கும் பகுதிகளில் எப்போதாவது ஒரு சமயத்தில் கிடைக்கும் வயல் நண்டுகளை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு இப்பகுதி பொதுமக்கள் வந்துள்ளதாகவும் ஒரு சிலர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.