தங்கு தடையின்றி கிடைக்க களப்பணி அலுவலர்கள் அவ்வப்போது நேரடியாக மேற்பார்வையிட வேண்டும்
பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க களப்பணி அலுவலர்கள் அவ்வப்போது நேரடியாக மேற்பார்வையிட வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க களப்பணி அலுவலர்கள் அவ்வப்போது நேரடியாக மேற்பார்வையிட வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்), பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (கிராமியம்) மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட இலக்கு விகிதாசார சாதனைகள் மீதான விரிவான ஆய்வை கலெக்டர் மேற்கொண்டார்.
மேலும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அவர் அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்ந்த களப்பணி அலுவலர்கள் அவ்வப்போது ஊரகப்பகுதிகளை நேடியாக மேற்பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்
அதேபோல மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டப் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் ஊரக சாலை பணிகள் ஆகியவற்றை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.
மேலும் நாளது தேதி வரை நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
18 ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பணிகளில் தற்போது பணி முடியுறும் நிலையில் உள்ள அனைத்து திட்டப்பணிகளையும் அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அடுத்து வரும் மாதத்திற்குள் முடிக்க துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும்.
முடிக்கப்பட்ட பணிகளுக்கு உடனடியாக பட்டியல் தொகை விடுவிக்கப்பட்டு முனைப்புடன் துறை அலுவலர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி இயக்குனர் நிலையிலான அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் (ஊரக வளர்ச்சி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.