தி.மு.க.-அ.தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே காரசார வாக்குவாதம்


தி.மு.க.-அ.தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே காரசார வாக்குவாதம்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், வி.சி.க. கவுன்சிலர்களிடையே காரசார வாக்குவாதம் செய்தனர். அப்போது தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் எனக்கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது

விழுப்புரம்

விழுப்புரம்

நகரமன்ற கூட்டத்தில் தர்ணா

விழுப்புரம் நகராட்சி அவசரக்கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு நகராட்சி அலுவலக மன்ற கூட்டரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நகராட்சியின் 42 வார்டு கவுன்சிலர்களும் நகரமன்ற அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது நகராட்சி தலைவர் தமிழ்செல்வி தி.மு.க. கவுன்சிலர்களை அழைத்து பேசிக்கொண்டிருந்தார். இதனால் கூட்டம் தொடங்க தாமதம் ஆனது. இதையடுத்து அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், வி.சி.க. கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் தங்கள் வார்டு பகுதிகளில் அடிப்படை வளர்ச்சி பணிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை, நிதியும் ஒதுக்குவதில்லை என்று கூறி கோஷம் எழுப்பியபடி கூட்டத்தை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் வாக்குவாதம்

இதன் பின்னர் தலைவர் தமிழ்செல்வி தலைமையில் கூட்டம் தொடங்கியது. துணை தலைவர் சித்திக்அலி, ஆணையர் சுரேந்திரஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர், ஆணையரை முற்றுகையிட்டு ஏன் கடந்த 2 மாதங்களாக நகரமன்ற கூட்டத்தை நடத்தவில்லை, மாதந்தோறும் சரிவர கூட்டத்தை நடத்தாதது ஏன்? என்று கேட்டு அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

மேலும் எங்கள் வார்டு பகுதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது, வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கவில்லை, சாலை, வடிகால் வசதி எதுவும் செய்யவில்லை. இதனால் மக்களிடையே எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது, இந்த பணிகளையெல்லாம் எப்போது செய்வீர்கள், மக்கள் பணிகளை செய்ய முறையாக நிதியும் ஒதுக்குவதில்லை என்று கூறி நகராட்சி தலைவர், ஆணையர் ஆகியோரிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

உடனே தி.மு.க. கவுன்சிலர் புல்லட்மணி உள்ளிட்ட சிலர் எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் சென்று ஏன் கூட்டத்தை நடத்த விடாமல் வீண் பிரச்சினை செய்கிறீர்கள், கூட்டத்தை நடத்த விடுங்கள் என்றார். அதற்கு அந்த கவுன்சிலர்கள், எங்களுக்கு கட்டளையிடுவதற்கு நீங்கள் யார்? என்று கேட்டனர்.

இதனால் தி.மு.க.- அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், வி.சி.க. கவுன்சிலர்களுக்கிடையே கடும் வாக்குவாதம், காரசாரமான விவாதம் நடந்தது. பதிலுக்கு தி.மு.க. கவுன்சிலர்களும், வாக்குவாதம் செய்த கவுன்சிலர்களிடம் கைகளை நீட்டி பேசியதால் நகரமன்றக்கூட்டம் போர்க்களம்போல் காட்சியளித்தது. அப்போது அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து தங்கள் வார்டுகளில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்காததை கண்டித்து நகராட்சி தலைவருக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளோம் என்று தலைவரின் மேஜையை தட்டி கூச்சலிட்டனர்.

அதற்கு தி.மு.க. கவுன்சிலர் புல்லட்மணி குறுக்கிட்டு இம்மன்றத்தில் நாங்கள்தான் மெஜாரிட்டியாக உள்ளோம், உங்களால் எப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும் என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு கூறி அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக மன்ற கூட்டத்தில் பெரும் கூச்சல், குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே நகராட்சி தலைவி தமிழ்செல்வி குறுக்கிட்டு கவுன்சிலர்களை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்களை சமாதானப்படுத்த முடியாததால், இம்மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள 81 தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், கூட்டம் இதோடு முடிவடைகிறது என்று அறிவித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., வி.சி.க. கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் எதிரே திரண்டு நகராட்சி தலைவிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ஆனந்தன், ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story