காரிமங்கலம் அருகே வேலை உறுதி திட்ட பணியாளர்களுடன் ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் தகராறு
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே வேலை உறுதி திட்ட பணியாளர்களுடன் ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏரி ஆக்கிரமிப்பு
காரிமங்கலம்அருகே உள்ள பெரியாம்பட்டி ஊராட்சி பூலாப்பட்டி ஏரி, சுக்கன் ஏரி ஆகியவற்றில் குளம், குட்டை அமைக்கும் பணி நடந்தது. அதன்படி பூலாப்பட்டி ஏரியில் குளம் அமைக்கும் பணிக்காக நேற்று தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள் அங்கு சென்றனர். அவர்கள் ஏரிக்கரை பகுதியில் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர், ஏரியை தனது பட்டா நிலம் என்று கூறி தகராறில் ஈடுபட்டார். மேலும் அங்கு பணி செய்யக்கூடாது என்று கூறி பெண் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, கலைவாணி, வருவாய் ஆய்வாளர் கவிப்பிரியா மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் அங்கு சென்றனர்.
பரபரப்பு
அவர்கள் நிலத்தை அளவிட்டு, ஆய்வு செய்தபோது, அது ஏரிக்கு சொந்தமான பகுதி என்பது தெரியவந்தது. மேலும் தனி நபர் அந்த இடத்தை ஆக்கிரமித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆக்கிரமிப்பாளரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஏரியில் குளம் அமைக்கும் பணி நடந்தது.
இதேபோல் சுக்கன் ஏரியை ஆக்கிரமித்திருந்த ஒருவர், அங்கு பணியில் ஈடுபட்ட தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பெண் பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இந்த 2 சம்பவங்களால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.