எம்ஜிஆர் நினைவு தின நிகழ்ச்சியில் அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளுபண்ருட்டியில் பரபரப்பு
பண்ருட்டியில் எம்.ஜி.ஆர். நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பண்ருட்டி,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் எம்.ஜி.ஆர். உருவ படம் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இதில் நகர செயலாளர் தாடி முருகன் தலைமையில் முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் நகர துணை செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகளும் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தள்ளுமுள்ளு
இதையடுத்து புகைப்படம் எடுத்து கொள்வதற்காக அ.தி.மு.க.வினர் வரிசையாக நின்றனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கட்சியினரிடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
அ.தி.மு.க.வை சேர்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தள்ளு முள்ளு சம்பவம் குறித்து நகர செயலாளர் தாடி முருகனிடம் கேட்டபோது நிர்வாகிகள், தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏற்பட்ட ஆர்வத்தினால் இந்த சம்பவம் நடந்து விட்டது. இது வருந்தத்தக்கது, மற்றபடி கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.