காதலனை போராடி கரம் பிடித்த பட்டதாரி பெண்
வெள்ளிச்சந்தை அருகே காதலித்து விட்டு வேறு பெண்ணை மணக்க முயன்ற காதலனை போராடி கரம் பிடித்த பட்டதாரி பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
குளச்சல்,
வெள்ளிச்சந்தை அருகே காதலித்து விட்டு வேறு பெண்ணை மணக்க முயன்ற காதலனை போராடி கரம் பிடித்த பட்டதாரி பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டதாரி பெண்
வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் லெனின் கிறாஸ் (வயது29), என்ஜினீயர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பி.காம். பட்டதாரியான ரிமோலின் விண்ணரசி (24) என்பவருக்கும் வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக தோன்றிய பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
லெனின் கிறாஸ் விடுமுறையில் ஊருக்கு வரும் போது இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றி வந்தனர். அப்போது நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் லெனின் கிறாஸ் வெளிநாட்டில் இருந்து ரிமோலின் விண்ணரசிக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அனுப்பி கொடுத்துள்ளார். மேலும் வாட்ஸ் அப் மூலம் இருவரும் தினமும் பேசி வந்தனர்.
திருமண நிறுத்தம்
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லெனின் கிறாஸ் ஊருக்கு வந்தார். அவருக்கு குடும்பத்தினர் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக சைமன்காலனியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து கடந்த 11-ந் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனையறிந்த ரிமோலின் விண்ணரசி அதிர்ச்சி அடைந்தார். அவர் திருமண நாளில் சைமன்காலனிக்கு விரைந்து வந்து அங்குள்ள பங்குத்தந்தையிடம் முறையிட்டார். இதனால் லெனின் கிறாசுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் திரும்ப சென்றனர்.
போலீசில் புகார்
பின்னர் இதுகுறித்து ரிமோலின் விண்ணரசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். இவரது புகார் மனுவை பரிசீலித்த போலீஸ் சூப்பிரண்டு இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க குளச்சல் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரிமோலின் விண்ணரசி அளித்த புகாரில் ஆதாரங்கள் இருந்ததால், அவரை திருமணம் செய்யும்படி லெனின் கிறாசுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து ஒரு வக்கீலின் ஏற்பாட்டின் படி இருவரும் நேற்று முன்தினம் இரவு குளச்சலில் ஒரு குருசடி முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் திருமணத்தை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து ரிமோலின் விண்ணரசி காதல் கணவர் லெனின் கிறாசுடன் சென்றார்.
காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தி கைப்பிடிக்க 9 நாட்கள் போராட்டம் நடத்திய இளம்பெண்ணின் துணிச்சலை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். இந்த சம்பவத்தால் வெள்ளிச்சந்தை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.