பதிவேடுகளை பார்வையிட சென்றவருக்கு அனுமதி மறுப்பு
குடிமங்கலம்:
கொங்கல்நகரம் ஊராட்சியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட இலுப்ப நகரத்தைச் சேர்ந்த மந்தராசலம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிமை கோரியிருந்தார். அதற்காக கொங்கல் நகரம் ஊராட்சியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை மே 31 -ந் தேதி (நேற்று) அலுவலக வேலை நேரத்தில் முன்னறிவிப்பு செய்துவிட்டு ஊராட்சி அலுவலகத்தில் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையானவற்றை நகல் எடுத்துக் கொள்ளலாம் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று ஊராட்சி அலுவலகத்திற்கு மந்தராசலம் வந்தபோது பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிலர் பதிவேடுகளை பார்வையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குடிமங்கலம் போலீசார், குடிமங்கலம் ஆணையாளர் சிவகுருநாதன் , வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சாதிக் பாட்சா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் வருகிற 15-ந் தேதி கொங்கல்நகரம் ஊராட்சி பதிவேடுகளை மந்தராசலம் பார்வையிட்டு கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.