தமிழ் மொழியில் கோப்புகளை கையாள வேண்டும்
அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் மொழியில் கோப்புகளை கையாள வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆட்சிமொழி பயிலரங்கத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
நாகர்கோவில்:
அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் மொழியில் கோப்புகளை கையாள வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆட்சிமொழி பயிலரங்கத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
ஆட்சிமொழி பயிலரங்கம்
குமரி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ் மொழியினை வளர்க்க வேண்டுமென பொதுமக்கள், மாணவர்கள் இடையே அரசு பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தமிழ் இணைய கல்விக்கழகம் வாயிலாக கல்வித்திட்டங்கள், நூலகம், ஆய்வு மற்றும் உருவாக்கம், தகவலாற்றுப்படை போன்றவற்றை தமிழ் மொழியில் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசுஅலுவலகங்களிலும்...
மேலும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து அரசு அலுவலகங்களிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கோப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் போன்றவற்றை கையாள்வது குறித்து ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. எனவே, அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழியில் கோப்புகளை கையாள வேண்டும் என்றார்.
மாணவர்களை பாராட்டிய கலெக்டர்
இந்த நிலையில் மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் பிறந்த நாளன்று குமரி மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் 4 மாணவர்களுக்கும், 2-ம் பரிசாக தலா ரூ.3 ஆயிரம் வீதம் 4 மாணவர்களுக்கும், 3-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் 4 மாணவர்களுக்கும், சிறப்பு பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் 4 மாணவர்களுக்கும் என மொத்தம் 16 மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கனகலட்சுமி, திருவாரூர் மாவட்டம் முதுகலை தமிழாசிரியர் கோமல்தமிழமுதன், நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப்பேராசிரியர் சுகிர்தா பஸ்மத் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.