சாப்டூர் பகுதியில் வனவிலங்குகளுக்காக தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி - வனத்துறை நடவடிக்கை
சாப்டூர் பகுதியில் வனவிலங்குகளுக்காக தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறை மேற்கொண்டு உள்ளது.
பேரையூர்
சாப்டூர் பகுதியில் வனவிலங்குகளுக்காக தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறை மேற்கொண்டு உள்ளது.
வன விலங்குகள்
மதுரை மாவட்டம் சாப்டூர் வனப்பகுதி சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. புலிகள் சரணாலயமான இந்த வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, கரடி, வரையாடுகள், காட்டெருமைகள், மான்கள், செந்நாய்கள், காட்டுப்பன்றிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. வனப்பகுதியில் உள்ள குட்டைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் குறைவாக உள்ளதால் வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் அளிப்பதற்கு வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கும் முன்னரே கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது.
இதனால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் குடிநீர் தேவைக்காக ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறை சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டி அமைத்து வனவிலங்குகளின் தாகம் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாப்டூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் குடிநீருக்காக இறங்கும் அடிவார பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தொட்டி
மணலூத்து, தேன்மலையான் கோவில் சரகம், கேணி அருவி, கோட்டமலை, மள்ளபுரம் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டிகளுக்கு வனப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மோட்டார் மூலம் குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சாப்டூர் வனத்துறை வனச்சரகர் செல்லமணி கூறியதாவது, தற்போது கோடை காலம் வருவதால் மலை மீது உள்ள வனப்பகுதியில் குட்டைகள் மற்றும் நீரோடைகளில் குடிநீர் குறைவாக உள்ளது. இதனால் வனவிலங்குகளின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அடிவார பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆங்காங்கே ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.