வைகை ஆற்றில் இறங்கிய சந்தான கோபால கிருஷ்ண சுவாமி


வைகை ஆற்றில் இறங்கிய சந்தான கோபால கிருஷ்ண சுவாமி
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அழகன்குளத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழாவையொட்டி சந்தான கோபாலகிருஷ்ணசாமி கள்ளழகர் வேடமணிந்து வைகை ஆற்றில் இறங்கினார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

அழகன்குளத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழாவையொட்டி சந்தான கோபாலகிருஷ்ணசாமி கள்ளழகர் வேடமணிந்து வைகை ஆற்றில் இறங்கினார்.

சித்திரை திருவிழா

மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட அழகன்குளம் கிராமத்தில் உள்ள ஆண்டாள் சமேத சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சித்திரை மாதத்தில் சந்தான கோபால கிருஷ்ணசாமி கள்ளழகர் வேடமணிந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி அழகன்குளம்-பெருங்குளம் வைகை ஆற்றில் சாமி இறங்கும் காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று காலை 6 மணி முதல் ஆற்றின் கரையோரத்தில் காத்துக்கிடந்தனர்.

வைகை ஆற்றில் இறங்கினார்

காலை 7 மணி அளவில் சந்தான கோபால கிருஷ்ணசாமி அழகன்குளத்தில் இருந்து கள்ளழகர் வேடமணிந்து பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் ஊர்வலமாக வந்தார். வழிநெடுகிலும் கோவிந்தா கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சியடித்து சாமியை குளிர்வித்தனர். வைகை ஆற்றங்கரைக்கு வந்த அவரை பக்தர்கள் சொம்புகளில் சர்க்கரையை நிரப்பி சூடம் ஏற்றி வரவேற்றதுடன் பயபக்தியுடன் வழிபட்டனர்.

ஏராளமானோர் கள்ளழகர் வேடமணிந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து காலை 9 மணி அளவில் சந்தான கோபால கிருஷ்ணசாமி கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் பெருங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த 4 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார்.

தண்ணீர் பந்தல்

சாமி ஊர்வலம் நடைபெற்ற வழிநெடுகிலும் யாதவர் உறவின் முறை உள்பட பல்வேறு சமூகத்தினர் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள் போன்றவற்றை வழங்கினர். விழாவையொட்டி தீப்பந்தம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் கிருஷ்னை தெய்வபிரகாசம், அறங்காவலர்கள் வாசுகி ஸ்ரீதரன், வக்கீல் அசோகன் அமுதா, சுமுகி பிரகலாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் அழகன்குளம் யாதவர் சமூகத்தினர், இந்து சமூக சபையினர், பெருங்குளம் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உச்சிப்புளி போலீசாரும், தேவிபட்டினம் போலீசாரும் செய்திருந்தனர்.


Next Story