ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி
நாச்சிக்குப்பத்தில் ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
நாச்சிக்குப்பத்தில் ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியை குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, தையல் எந்திரம், முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். கூட்டத்தில் மொத்தம் 279 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அயயப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிவாரண நிதி
இந்த கூட்டத்தில் கடந்த 1.10.2019 அன்று வேப்பனப்பள்ளி அருகே நாச்சிக்குப்பத்தில் உள்ள குட்டையில் மூழ்கி ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்த யேசுப்பிரியா (வயது 15), தர்மபுரியை சேர்ந்த சித்ரா (15) ஆகியோர் இறந்தனர். அவர்கள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகை தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை சிறுமிகளின் பெற்றோர்களிடம் கலெக்டர் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நெடுமருதியை சேர்ந்த நந்தகுமார் என்ற மாற்றுத்திறனாளி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தனக்கு காதொலி கருவி கேட்டு மனு கொடுத்து இருந்தார். அவருக்கு உடனடியாக ரூ.3 ஆயிரத்து 200 மதிப்புள்ள காதொலி கருவியை கலெக்டர் வழங்கினார்.