நிதிநிறுவன அதிபர் அரிவாளால் வெட்டிப் படுகொலை
நிதிநிறுவன அதிபர் அரிவாளால் வெட்டிப் படுகொலை
வீரபாண்டி
தலைவராக யார் இருக்க வேண்டும்? என்பதில் ஏற்பட்ட தகராறில் திருப்பூரில் நிதிநிறுவன அதிபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நிதி நிறுவன அதிபர்
திருப்பூர் காங்கயம் சாலை செவந்தாம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்த குழந்தைவேல் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 29). நிதி நிறுவன அதிபர். இவரும், இவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (37), மணிகண்டன் (29), குணா (31), அறிவுபிரகாஷ் (34) மற்றும் பிரவீன் குமார் (28) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு செவந்தாபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அங்கிருந்த பாரில் அமர்ந்து குடித்தனர்.
சிறிது நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் மதுபோதை தலைக்கேறியது. அப்போது நிதி நிறுவன அதிபர் சுரேஷ் நான்தான் பெரியவன் என்றும், தன்னுடைய பேச்சுக்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால் அவருடைய நண்பர்கள் அதை ஏற்க மறுத்து விட்டதோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரைெயாருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் பார் உரிமையாளர் அவர்களை பாரைவிட்டு வெளியேறுமாறு கூறினார். இதையடுத்து டாஸ்மாக் பாரில் இருந்து அனைவரும் வெளியேறினர்.
வெட்டிக்கொலை
அங்கிருந்து வெளியே வந்தவர்கள் செவந்தாம்பாளையம் பள்ளி அருகே மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது 5 பேரும் சேர்ந்து சுரேசை அரிவாளால் தலையில் பலமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேசை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் சுரேஷ் இறந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் சுரேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக் கடையில் ெபாருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சுரேசை அவருடைய நண்பர்கள் 5 பேரும் தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து கொலை வழக்கில் மோகன்ராஜ், மணிகண்டன், குணா, அறிவு பிரகாஷ், பிரவீன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலையான சுரேஷ் மற்றும் கைது செய்யப்பட்ட 5 பேர் மேலும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். யார் தலைவர்? என்ற சண்டையில் நிதி நிறுவன அதிபர் அவருடைய நண்பர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-