நிதி நிறுவன மேலாளர் வீட்டில் புகுந்து 17½ பவுன் நகைகள்- பணம் திருட்டு
பரமக்குடியில் பட்டப்பகலில் மூதாட்டியை ஏமாற்றி வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி 17½ பவுன் நகைகள், பணத்தை திருடி சென்று விட்டனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பங்களா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர் (வயது 36). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது மனைவி சுஜிதா மற்றும் குழந்தைகள் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்று விட்டனர். பின்பு ராஜசேகரும் வேலைக்கு சென்றுள்ளார்.
இதை அறிந்த மர்ம நபர் ஒருவர் ராஜசேகர் வீட்டிற்கு சென்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாயார் தங்கம்மாள் (61) என்பவரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். உடனே அவர் தண்ணீர் கொடுப்பதற்காக வீட்டின் மாடி பகுதிக்கு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் பிரிட்ஜ் மீது இருந்த சாவியை எடுத்து அறையை திறந்து அதற்குள் இருந்த பீரோவை திறந்தார். அதில் இருந்த 17½ பவுன் நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளார்.
பின்பு ராஜசேகர் அவரது தாயாருக்கு கடையில் வாழைப்பழம் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது அறையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்துள்ளார். பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்து நகைகள் மற்றும் பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராஜசேகர் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பின்பு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வீட்டில் சோதனை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.