மளிகை கடைக்காரர் இறந்த வழக்கில் நிதி நிறுவன உரிமையாளர் கைது
மளிகை கடைக்காரர் இறந்த வழக்கில் நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வையம்பட்டி:
பூனை செத்ததால் மோதல்
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த ஆர்.எஸ். மணியாரம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல்(வயது 42). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் தேக்கராஜ்(28). நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தேக்கராஜ் வளர்த்து வந்த பூனையை வடிவேல் எட்டி உதைத்ததில், அந்த பூனை செத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதாக கூறப்படுகிறது.
கைது
இந்த மோதலில் படுகாயமடைந்த வடிவேல் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் ஏற்கனவே சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது அதை கொலை அல்லாத மரணம் என 304(ii) என்ற பிரிவில் மாற்றம் செய்து, நிதி நிறுவன உரிமையாளரான தேக்கராஜை கைது செய்தனர்.