பழங்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
சிவகங்கை அருகே பழங்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கள ஆய்வு
சிவகங்கை அடுத்த உருளி கிராமத்தின் அருகில் உள்ள புன்செய்பகுதியில் வித்தியாசமான கற்களும், பானை ஓடுகளும் கிடப்பதாக வலசையை சேர்ந்த தருணேஷ்வரன் என்ற பள்ளி மாணவன் தகவல் கொடுத்தார். அதன்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கு கள ஆய்வு செய்தனர். அப்போது பழங்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- இ்ங்கு ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகள் கருமை நிறத்தில் குவியலாக காணப்படுகிறது, பல துண்டு குழாய்களும் மேற்பரப்பிலேயே கண்டறியப்பட்டது. அதிக அளவில் கிடைக்கும் செம்பூரான் கற்களும், செம்பூரான் பாறையிலேயே சற்றே தரமான கற்களும் இப்பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது.
2 ஆயிரம் ஆண்டுகள்
இந்த பாறையில் இரும்பிற்கான மூலப்பொருள் இருப்பதையும், அதை எரியூட்டி உருக்கினால் இரும்பு பொருட்கள் செய்யலாம் என்ற முறையையும் அக்கால இப்பகுதி மக்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை அறியமுடிகிறது. இதன்மூலம் பழங்காலத்தில் இங்கே வாழ்ந்த மக்கள் கத்தி, கோடரி, ஈட்டி, வாள் போன்ற ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்கூடமாக இப்பகுதியை பயன்படுத்தி இருக்கலாம். சுமார், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி இரும்பு காலத்தை சேர்ந்த ஆதிமனிதர்களின் வாழ்விட பகுதியாக இருந்திருக்கலாம்.
சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய்கள் மேற்பரப்பில் சிதைவுற்று கிடக்கின்றன. இரும்பு உருக்கும் உலைகளில் பயன்படுத்தப்படும் கெண்டியின் பாகங்கள் அதிக அளவில் சிதைந்து கிடக்கின்றன.
பானை ஓடுகள்
இரும்பை உருக்கும்போது கிடைக்கும் இரும்பு கழிவுகள் அதிகளவில் காணப்படுகின்றன. மேலும் இரும்பை உருக்க பயன்படும் எரியூட்டும் அடுப்பை போன்ற அமைப்பும் இங்கு காணப்படுகிறது. ஏராளமான சிவப்பு பானை ஓடுகளும், கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் அதிக அளவில் உள்ளன. பானையின் விளிம்பு பகுதி அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. வித்தியாசமான வெள்ளை நிற கற்களும் அதிகளவில் உள்ளன.
இப்பகுதியில் தொல்லியல்துறை முறையான ஆய்வை மேற்கொண்டால் சிவகங்கை மாவட்டத்தின் பழங்கால இரும்பு உருக்காலையின் வரலாறை அறியலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.